ALAM SEKITAR & CUACAECONOMY

வெள்ளத்தை எதிர்கொள்ள தன்னார்வலர்களை சேர்க்கும் பணியில் கெஅடிலான் தீவிரம்

ஷா ஆலம், அக் 7- ஆண்டு இறுதியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தன்னார்வலர்களை சேர்க்கும் பணியில் கெஅடிலான் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து தன்னார்வலராக பணியாற்ற விரும்புவோர் sukarelawankeadilan.org எனும் அகப்பக்கம் வாயிலாக பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெள்ளத்தை எதிர் கொள்வதற்கான முன்னேற்பாடுகளும் அமைந்துள்ளதால் கட்சியில் முதன் முறையாக தன்னார்வலர் இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதாக கெஅடிலான் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.

இம்முறை மேற்கொள்ளப்படும் தேர்தல் முன்னேற்பாடுகள் முற்றிலும் வேறுபட்டவையாக உள்ளன. கெஅடிலான் தேர்தல் இயந்திரத்தை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் இயக்குநர் என்ற முறையில் எனக்கு உள்ளது என அவர் சொன்னார்.

வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இப்போது தொடங்கி அடுத்த இரு வாரங்களுக்கு நாடு முழுவதும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தன்னார்வலர்களைச் சேர்க்கவுள்ளோம் என நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஃபாமி ஜைனால் அந்த புதிய பதவிக்கு தலைமையேற்பார் எனக் கூறிய ரபிஸ், வெள்ள உதவிக்கான அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்காக இளைஞர்களின் ஆதரவை அவர் திரட்டி வருவதாகச் சொன்னார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கலைக்கப்படாவிட்டாலும் இந்த தன்னார்வலர்கள் அடுத்த இரு வாரங்களில் தங்கள் பணியை மேற்கொள்ளத் தொடங்குவர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :