ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

விரைவில் தேர்தலா?- விஷப்பரீட்சை வேண்டாம்- வானிலை ஆய்வுத் துறை ஆலோசனை

ஷா ஆலம், அக் 7- வடகிழக்கு பருவமழை காலத்தில் நாட்டின் 15வது பொதுத் தேர்தல் நடத்தப்படுவதை மலேசிய வானிலை ஆய்வுத் துறை அவ்வளவாக வரவேற்கவில்லை.
நாடு தற்போது பருவமழை நகர்வு கட்டத்தில் உள்ளதால் நாடு முழுவதும் அடிக்கடி மழை பெய்வதைக் காண முடிகிறது என்று வானிலை ஆய்வுத் துறையின் துணைத் தலைமை இயக்குநர் ஹிஷாம் முகமது அனிப் கூறியதாக ஆஸ்ட்ரோ அவானி செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுத் தேர்தல் தற்போது நடத்தப்படுவதை நிர்வாகத் தரப்பில் இருக்கும் நாங்கள் ஊக்குவிக்கவில்லை. வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கும் இக்காலக்கட்டத்தில் எதற்காக நாம் விஷப்பரீட்சையில் இறங்க வேண்டும்? பல இடங்களில் வெள்ளம் ஏற்படும் என நமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டார்.

தற்போது ஜொகூர், மலாக்கா மற்றும் பேராக்கில் வெள்ளம் ஏற்பட்டு விட்டது. வானிலை ரீதியாக பார்த்தால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய சூழல் பொருத்தமானதாக இல்லை என்றார் அவர்.

நேற்று வெப்பினர் இணையம் வாயிலாக நடைபெற்ற ‘பருவநிலை மாற்றத்தின் சவால்கள்- நாம் தயாரா?‘ என்றத் தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இவ்வாண்டிற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு ஏதுவாக நாடாளுமன்றம் விரைந்து கலைக்கப்பட வேண்டும் என கடந்த வாரம் கூடிய அம்னோ உச்சமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.


Pengarang :