ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் சட்டமன்றம் இவ்வாண்டு கலைக்கப்படாது- மந்திரி புசார் திட்டவட்டம்

கோம்பாக், அக் 10- பதினைந்தாவது பொதுத் தேர்தல் இவ்வாண்டில் நடத்தப்பட்டாலும் சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளது.

வெள்ளப் பிரச்னையை எதிர்கொள்வது மற்றும் மக்களின் நலனுக்காக பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வது ஆகியவற்றுக்கே மாநில அரசு முன்னுரிமை அளிக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வெள்ளத்தை எதிர்கொள்வது மற்றும் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இவ்விவகாரத்தை நாம் மறந்தால் குழப்பமே நீடிக்கும் என அவர் சொன்னார்.

இருந்த போதிலும் ஒரு சிலர் (அரசாங்கம்) இன்னும் நிலைமையை உணராததோடு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் என்றார் அவர்.

இன்று இங்கு நடைபெற்ற கோம்பாக் தொகுதி நிலையிலான நபிகள் நாயகம் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இத்தகைய ஆணவப் போக்கு அவர்களுக்கே வினையாக முடியும். இது எப்படி இருப்பினும் பரவாயில்லை. நாம் மக்களுக்கே முன்னுரிமை அளிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தல் இவ்வாண்டில் நடத்தப்பட்டால் பக்கத்தான் வசமிருக்கும் சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் சட்டமன்றதைக் கலைக்காது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த 5 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :