ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

வணிகம் செய்ய விரும்பும் மகளிருக்கு ‘நாடி‘ திட்டத்தின் வழி 5,000 ரிங்கிட் வரை கடனுதவி – மந்திரி புசார்

ஷா ஆலம், அக் 14– வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம் உபரி வருமானம் பெற விரும்பும் மகளிர் நியாகா டாருள் ஏசான் (நாடி) திட்டத்தின் மூலம் கடனுதவிக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாநில அரசின் யாயாசான் ஹிஜ்ரா அறவாரியத்தின் மூலம் இந்த கடனுதவித் திட்டம் அமல்படுத்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அதிகமான மகளிர் சுயகாலில் நிற்பதை உறுதி செய்வதற்காகவும் அவர்களை ஆக்கத்திறன் கொண்டவர்களாக உருவாக்குவதற்காகவும் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள திட்டங்களில் இதுவும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

வர்த்தகத்தில்  ஈடுபடுவதன் மூலம் அதிகமான மகளிர் சுயகாலில் நிற்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தர மாநில அரசு பெருமனதுடன் முன்வந்துள்ளது.

மகளிர் மேம்பாட்டில் எப்போதும் பரிவு கொண்டுள்ள மாநில அரசின் இந்த உயரிய நோக்கத்திற்கேற்ப நாடி திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று தனது பேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வணிகர்கள் பல்வேறு திட்டங்களின் வாயிலாக கடனுதவி பெறுவதற்கு ஏதுவாக மாநில அரசு கித்தா சிலாங்கூர் முன்னெடுப்பின் வாயிலாக ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

வணிகர்கள் குறைந்த பட்சம் 1,000 ரிங்கிட் முதல் 5,000 ரிங்கிட் வரை கடனுதவி  பெறுவதற்கும் ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான காலக்கட்டத்தில் அதனை திரும்பச் செலுத்துவதற்கும் இந்த நாடி திட்டம் வாய்ப்பினை வழங்குகிறது.

நாடி திட்டத்தின் மூலம் இவ்வாண்டில் 1,722  வணிகர்களுக்கு 86.1 லட்சம் வெள்ளியை கடனாக வழங்க ஹிஜ்ரா அறவாரியம் இலக்கு கொண்டுள்ளது.


Pengarang :