ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூரில் பல்வேறு போதைப் பொருள் குற்றங்களுக்காக 11,472 பேர் கைது

ஜோகூர் பாரு, அக் 14 – இவ்வாண்டு ஜனவரி 1 முதல் அக்டோபர் 12 வரை மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ஓப்ஸ் தாப்பிஸ் சோதனை நடவடிக்கையில் பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுக்காக 11,472 பேரை ஜோகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

மாநிலத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மீன்பிடித் தளங்கள், மக்கள் வீட்டுத் திட்டங்கள், போதைப் பித்தர்களின் புகலிடங்கள் மற்றும் பெல்டா பகுதிகள் ஆகியவற்றில் இச்சோதனையை மேற்கொண்டதாக ஜோகூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாபாட் கூறினார்.

இந்த நடவடிக்கையின் போது மொத்தம்  23,973 பேர் சோதனை செய்யப்பட்டதாகவும்  பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுக்காக அவர்களில் 11,472 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 13 முதல் 70 வயதுக்குட்பட்ட 10,692 ஆண்கள் மற்றும் 780 பெண்களும் அடங்குவர். போதைப்பொருள் விநியோகித்தது தொடர்பில் 2,240 பேரும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 3,912 பேரும் போதைப்பித்தர்கள் 5,320 பேரும் இச்சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.

மேலும், தேடப்படுவோர் பட்டியலில் இருந்த 3,100 நபர்களும் இச்சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் 796 பேர் மீது 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39சி பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


Pengarang :