ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ள அபாயம்- வடிகால்கள், நீர்த்தேக்கங்களை பராமரிக்கும் பணி தீவிரம்

அம்பாங், அக் 17- வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் விதமாக மாநிலத்தில் குறிப்பாக சிப்பாங், பெட்டாலிங், கிள்ளான், கோல சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

வடிகால்கள், நீரோடைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை பராமரிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும் அதே வேளையில் பேரிடர் ஏற்படும் பட்சத்தில் மின்சாரம், நீர் மற்றும் தொலைத் தொடர்பில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதிலும் தீவிரம் காட்டப்படுவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

வட கிழக்கு பருவ மழை மற்றும் கடல் பெருக்கு அபாயத்தை எதிர் கொள்வதற்கான முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக அடுத்த வாரம் தொடங்கி வெள்ள அபாயம் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு வருகை புரிய இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னதாக வடிகால் மற்றும் நீர் பாசனத்துறையுடன் சில சந்திப்புகளை நடத்த இருக்கிறேன். இந்த கள ஆய்வை மேற்கொள்வதன் முக்கிய நோக்கம் வடிகால்கள், நீரோடைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பராமரிப்பு முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதைக் கண்டறிவதாகும் என்றார் அவர்.

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத் திடலில் நேற்று நடைபெற்ற மாநில அரசின் அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வெள்ளத்தை எதிர் கொள்வதற்கு ஏதுவாக இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற பேரிடர் மாதிரி பயிற்சியில் 67 அரசு நிறுவனங்களைச் சேர்ந்த 343 பேர் கலந்து கொண்டனர்.


Pengarang :