ECONOMYNATIONAL

பொதுத் தேர்தல்- கோலாலம்பூரில் அதிகாரிகள் உள்பட 7,700 போலீஸ்காரர்கள் பணியில் ஈடுபடுவர்

கோலாலம்பூர், அக் 18- கோலாலம்பூரில் வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் 7,700 அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் ஈடுபடுவர்.
கோலாலம்பூர் மாநகரில் உள்ள 8,700 மொத்த போலீஸ்காரர்களில் 7,700 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று அதன் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.

இந்த போலீஸ்காரர்கள் அனைவரும் கோலாலம்பூரில் உள்ள 288 வாக்களிப்பு மையங்களில் பணியில் ஈடுபடுவர்.  பொதுத் தேர்தல் குறித்த முடிவை தேர்தல் ஆணையம்  அறிவித்தவுடன் அவர்கள் அனைவரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டது என்றார் அவர்.

எஞ்சியுள்ள 1,000 போலீஸ்காரர்கள் ரோந்துப் பணி, குற்றச்செயல் தடுப்பு, நிர்வாகப் பணி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல்  பணிகள் தவிர்த்து வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் அதில் யாரும் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையிலும்  காவல் துறையினர் ஈடுபடுவர் என்றார் அவர்.

இன்று இங்குள்ள கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில்  அவர்  இதனைத் தெரிவித்தார்.


Pengarang :