ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

தாமான் முத்தியாரா குடியிருப்பாளர்களின் 40 விழுக்காட்டு புகார்களுக்குத் தீர்வு

கிள்ளான், அக் 18– இங்குள்ள புக்கிட் ராஜா, தாமான் முத்தியாரா குடியிருப்பாளர்கள் எழுப்பிய புகார்களில் 40 விழுக்காட்டிற்கு இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரையிலான காலக்கட்டத்தில் கிள்ளான் நகராண்மைக்கழகம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.

கால்வாய், நிலச்சீராக்கம், சட்டவிரோத கட்டுமானங்கள், செயல்படாத நீர் இறைப்பு பம்ப் இயந்திரங்கள் மற்றும் கைவிடப்பட்ட வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வு  காணப்பட்டுள்ளதாக புக்கிட் அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

மழைகாலத்தின் போது நீரை இறைத்து கால்வாயில் விடும் முக்கிய சாதனமாக அந்த பம்ப் இயந்திரங்கள் விளங்கி வந்தன. எனினும் அங்கு மரங்கள் வளர்ந்த காரணத்தால் அந்த இயந்திரங்கள் முறையாக இயங்கவில்லை. அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்கும் விதமாக அந்த இயந்திரங்கள் சீர் செய்யப்பட்டுவிட்டன என்றார் அவர்.

கடந்த ஆகஸ்டு மாதம் அப்பகுதி மக்கள் கொடுத்த புகார் மீது மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக தாம் இங்கு வருகை மேற்கொண்டதாக கூறிய அவர், இப்பிரச்னைகளுக்குத் தீர்வுக் காண்பதில் கிள்ளான் நகராண்மைக் கழகம் தீவிரமாக செயல்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.

இதனிடையே, அக்குடியிருப்பாளர்கள் எழுப்பிய புகார்களுக்கு தீர்வு காண்பதில் இதரத் துறைகளுடன் இணைந்து தாங்கள்  பணியாற்றி வருவதாக கிள்ளான் நகராண்மைக் கழகத் துணைத் தலைவர் எல்யா மரினி டர்மின் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் சார்ந்த சில விவகாரங்கள் தொடர்பில் இதரத் தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. எது எப்படியிருப்பின் இப்பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் என்றார் அவர்.


Pengarang :