ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெ.72,000 கையூட்டு குற்றச்சாட்டு தொடர்பில் நிறுவன தலைமை நிர்வாகி கைது

கோலாலம்பூர், அக் 19- லஞ்சமாக 72,000 வெள்ளியைப்  பெற்றதாக செய்யப்பட்ட புகார் தொடர்பாக கட்டுமான மற்றும் பராமரிப்பு நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாகி மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு நிறுவனம் ஒன்றிடமிருந்து 50 லட்சம் வெள்ளி கடன் பெற்றுத் தருவதில் ஒரு நிறுவனத்திற்கு உதவுவதற்காக அந்த தொகையை அவர் கையூட்டாகப் பெற்றதாக கூறப்படுகிறது.

வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று மாலை 6.00 மணியளவில் எஸ்.பி.ஆர்.எம். தலைமையகம் வந்த போது 53 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கடன் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதற்கு உதவுவதற்காக அதன் நிர்வாக இயக்குநரிடமிருந்து சந்தேகப் பேர்வழி கையூட்டு பெற்றதாக இவ்விசாரணையில் தொடர்புடைய வட்டாரம் கூறியது.

அந்த சந்தேக நபர் தலைமை நிர்வாகியாக இருக்கும் கட்டுமான மற்றும் பராமரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

இனிடையே, இவ்விவகாரம் தொடர்பாக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதை புத்ரா ஜெயா எஸ்.பி.ஆர்.எம். இயக்குநர் முகமது அனுவார் இஸ்மாயில் உறுதிப்படுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பில் 2009 ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம். சட்டத்தின் 16(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.


Pengarang :