ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மாநில அரசின் இலவசக் காப்புறுத் திட்டத்தில் இதுவரை 34,174 பேர் பதிவு

ஷா ஆலம், அக் 19- மந்திரி புசார் கட்டமைப்பின் (எம்.பி.ஐ.) இலவச காப்புறுத் திட்டத்தில் (இன்சான்) பதிவு செய்ததன் மூலம் இதுவரை 34,174 பேர் காப்புறுதி பாதுகாப்பைப் பெற்றுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் தேதி இந்த இலவச காப்புறுதி  திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 39,866 பேர் அதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாக எம்.பி.ஐ. வர்த்தக வியூகத் துறையின் தலைவர் ராஜா நேர் இஸா ராஜா ஜாபர் கூறினார்.

தகுதி உள்ள விண்ணப்பங்கள் உடனடியாக அங்கீரிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 40,000 விண்ணப்பங்கள் இ-வாலட் வேவ்பேய்  செயலி மூலம் செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.

விண்ணப்பதாரர் சிலாங்கூர் மாநில வாக்காளராக இல்லாதது அல்லது நுட்ப காரணங்களால் ஒரு சிலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. எனினும், கடந்த அக்டோபர் முதல் தேதி தொடங்கி இதுவரை இந்த திட்டத்திற்கு கிடைத்து வரும் ஆதரவு வரவேற்கத்தக்க  வகையில் உள்ளது என்றார் அவர்.

இதனிடையே, புறநகர்ப்பகுதிகளில் உள்ளவர்கள் குறிப்பாக தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதில் சிரமத்தை  எதிர்நோக்குவோரை இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு  தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

மாநிலத்திலுள்ள 60 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் இந்த இன்சான் காப்புறுதி  திட்டம் அமல்படுத்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதி அறிவித்திருந்தார்.

சுமார் 6,000 கோடி வெள்ளி மதிப்பிலான காப்புறுதி பாதுகாப்பை கொண்ட இத்திட்டத்தின் மூலம் விபத்தின் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர உடல் செயலிழப்புக்கு  10,000 வெள்ளி வரை இழப்பீடு பெற முடியும்.


Pengarang :