ECONOMYMEDIA STATEMENT

ரேலா உறுப்பினர் படுகொலை தொடர்பில் சுகேந்திரன், மகேந்திரன் மீது குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா, அக் 21- அடுக்குமாடி வீட்டின் எதிரே ரேலா எனப்படும் மக்கள் தன்னார்வலர் காவலர் ஒருவர் இம்மாதம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் இரு சகோதரர்கள் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

மாஜிஸ்திரேட் ஸப்ரான் ரஹிம் ஹம்சா முன்னிலையில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக ஆர். சுகேந்திரன் (வயது 26)  மற்றும் ஆர்.மகேந்திரன் (வயது 24) ஆகிய இரு சகோதரர்களும் தலையை அசைத்தனர்.

கொலை வழக்கு உயர்நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் அவ்விருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

இம்மாதம் 8 ஆம் தேதி இரவு 9.12 மணியளவில் இங்குள்ள அடுக்குமாடி வீட்டின் எதிரே யாஹ்யா கமாருடின் (வயது 45) என்பவரை படுகொலை செய்ததாக அவ்விரு சகோதரர்கள் மீதும் கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட தண்டனைச் சட்டத்தின் 34வது பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த வழக்கின் மறு விசாரணை வரும் ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் சித்தி மர்யாம் ஜமிலா முகமது கமால் இந்த வழக்கை நடத்தும் வேளையில் இரு சகோதரர்களைப் பிரதிநிதித்து வழக்கறிஞர் குர்ஷாரோஞ்சிட் கவுர் ஆஜராகிறார்.


Pengarang :