ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிள்ளானில் மலிவு விற்பனை- மழைக்கு மத்தியிலும் மக்கள் மகத்தான ஆதரவு

கிள்ளான், அக் 22- இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசின் மலிவு விற்பனைக்கு மக்கள் மத்தியில் மகத்தான ஆதரவு கிடைத்தது. மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் காலை 7.30 மணி முதல் வரிசையில் காத்திருந்து அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சென்றனர்.

சுல்தான் சுலைமான் அரங்கில் இன்று காலை இந்த விற்பனை தொடங்குவதற்கு முன்பாவே சுமார் 250 பேர் வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது. மலிவான விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அவர்கள் ஆர்வத்துடன் இருந்ததை இது காட்டுகிறது.

இன்றைய நிகழ்வில் 500 கோழிகள், 300 பாக்கெட் உறைய வைக்கப்பட்ட மாட்டிறைச்சி, 150 போத்தல் 5 கிலோ சமையல் எண்ணெய், 300 பை 5 கிலோ அரிசி, 300 தட்டு பி கிரேட் முட்டை 300 பாக்கெட் மீன் விற்பனைக்கு வைக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) வருவாய் பிரிவு நிர்வாகி நோர் அஸிலா அட்னான் கூறினார்.

அதிகமானோர் இத்திட்டத்தின் வழி பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக ஒரு வாடிக்கையாளர் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் தலா ஒன்றை மட்டுமே வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த விற்பனைக்காக அவர்கள் காத்திருந்ததை இது காட்டுகிறது. கனத்த மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்திலுள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் உள்ள 160 இடங்களில் இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கு மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஜெலாஜா ஏசான் ராக்யாட் எனும் இத்திட்டம் கடந்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும்.


Pengarang :