ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

கெடாவில் 547 பயணிகளுடன் தரை தட்டிய பெர்ரி படகு மீட்கப்பட்டது

அலோர்ஸ்டார், அக் 24 - இம்மாதம் 23ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்களுடன்  கோல கெடாவிலிருந்து லங்காவி நோக்கிச் சென்று கொண்டிருந்த தரை தட்டிய பெர்ரி படகு நேற்றிரவு மீட்கப்பட்டு கோல கெடா படகுத் துறைக்கு பாதுகாப்பாக இழுத்துச் செல்லப்பட்டது.

 கோல கெடாவில் உள்ள சரக்கு நிறுவனத்திற்குச் சொந்தமான இழுவை படகு மூலம் இரவு 9.25 மணியளவில் அந்த பெர்ரி படகு மீட்கப்பட்ட வேளையில்  அதில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக  மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் கோல கெடா மண்டல இயக்குநர் கமாண்டர் நூர் அரியாந்தி இஷாக் கூறினார்.

 நரம்புக் கோளாறு உள்ள ஒரு பயணியும் சுவாசப் பிரச்னையை எதிர்நோக்கிய இரு பயணிகளும்   கண்காணிப்பிற்காக இங்குள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கோலா கெடா மற்றும் யான் ஆகிய பகுதிகளில் உள்ள உள்ளூர் மீன்பிடி படகுகள் மற்றும் ஒரு போலீஸ் பி.எஸ்.ஐ.19 ரோந்துப் படகு மூலம் மொத்தம் 272 பயணிகள் கட்டங் கட்டமாக மீட்கப்பட்டனர். மற்ற பயணிகள் பெர்ரி படகு மீட்கப்படும் வரை அதனுள்ளே இருந்தனர் என்று அவர் கூறினார் ஒரு அறிக்கையில் கூறினார்.

கோலா கெடா முகத்துவாரத்திலிருந்து 1.2 கடல் மைல் தொலைவில் 547 பேருடன் பஹாகியா 98 பயணிகள் பெர்ரி படகு  தரை தட்டியது  குறித்து  கோல கெடா கடல்சார் மண்டலம் மாலை 4.15 மணியளவில்  கடல் துறையிடம் இருந்து புகாரைப்  பெற்றது.

Pengarang :