ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

காப்பார், கிள்ளான், கோத்தா ராஜா தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள ஹராப்பான் நம்பிக்கை

கிள்ளான், அக் 24- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் காப்பார், கிள்ளான் மற்றும் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது.

அக்கூட்டணியின் கோட்டைகளாக விளங்கும் இத்தொகுதிகளில் வழங்கப்பட்ட சேவையின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை தாங்கள் கொண்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த தொகுதிகள் தொடர்பான விவாதம் கடந்த ஜூல மாதம் மிகவும் எளிதான முறையில் முற்றுப் பெற்று விட்டது. அதாவது, கடந்த பொதுத் தேர்தலின் போது போட்டியிட்ட கட்சிகளே மீண்டும் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

உதாரணத்திற்கு, கோத்தா ராஜா தொகுதியில் அமானா கட்சி வென்றது. கிள்ளான் தொகுதியில் ஜசெகவும் காப்பாரில் பி.கே.ஆர். கட்சியின் போட்டியிட்டன. இம்முறையும் அத்தொகுதிகளில் அதே கட்சிகள் போட்டியிடும் என அவர் குறிப்பிட்டார். 

இருந்த போதிலும், நாம் வெற்றி பெறுவோம் என அறிக்கை விடுவது மட்டும் போதாது. நமது தேர்தல் இயந்திரம் வலுவாக செயல்படுவதன் மூலம் அதனை நிரூபிக்க வேண்டும். தேர்தல் இயந்திரம் ஆக்கத்துடன் செயல்படும் பட்சத்தில் காப்பார், கிள்ளான் மற்றும் கோத்தா ராஜா ஆகிய தொகுதிகள் ஹராப்பான் வசமே உள்ளன என்ற நற்செய்தி நம்மை வந்தடையும் என்றார் அவர்.

நேற்று கிள்ளான், தாமான் செந்தோசா சமூக மண்டபத்தில் கிள்ளான், காப்பார் மற்றும் கோத்தா ராஜா தொகுதிகளுக்கான தேர்தல் இயந்திர தொடக்க நிகழ்வுக்கு தலையேற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் அப்துல்லா சானி 16,306 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். கிள்ளான் தொகுதியில் சார்ல்ஸ் சந்தியாகோ 78,773 வாக்குகளும் கோத்தா ராஜா தொகுதியில் முகமது சாபு 90,697 வாக்குகளும் பெரும்பான்மையாகப் பெற்று வெற்றி பெற்றனர்.


Pengarang :