ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

நலத் திட்டங்கள் வெறும் விளம்பரம் அல்ல, மக்கள் பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டது- மந்திரி புசார்

கிள்ளான், அக் 24- மாநில அரசு அமல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் மக்கள் மனதைக் கவரும் நோக்கிலான வெற்று விளம்பரங்கள் அல்ல என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மக்களுக்கு ஆக்கத்தையும் அதிகாரத்தையும் வழங்கும் நோக்கில் ஒவ்வொரு திட்டமும் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.

நாம் கடந்த 2008 ஆம் ஆண்டில் வெறும் ஏழு திட்டங்களுடன் அரசு நிர்வாகத்தை தொடங்கினோம். அடுத்த தடுத்த ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இந்த திட்டங்கள் மக்கள் மனதைக் கவரும் நோக்கிலான வெற்று விளம்பரங்கள் அல்ல. மக்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்ட இத்திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்துள்ளன என்றார் அவர்.

பெடுலி சேஹாட் திட்டத்தை நாம் உதாரணம் கூறலாம். இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இலவச மருத்துவ பரிசோதனை மக்கள் தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தியது. மேலும்,வீட்டுடமை, திருமணத் தம்பதியருக்கு வெகுமதி போன்ற சலுகைகளும் இதில் இடம் பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இத்திட்டங்கள் யாவும் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. சமுதாயத்தில் சமூக, பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வருவதில் இத்திட்டங்கள் பெரிதும் துணை புரிகின்றன என்றும் அவர் சொன்னார்.

இங்குள்ள சுல்தான் சுலைமான் அரங்கில் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

மாநில அரசின் உதவிகள் மேலும் அதிகமான மக்களைச் சென்று சேர்வதை உறுதி செய்வதற்காக ஐ.பி.ஆர். எனப்படும் பெடுலி சேஹாட் திட்டம் 60 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.


Pengarang :