ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டில்  இம்மாத  இறுதியில் மோசமான வானிலையா? வானிலை ஆய்வுத் துறை மறுப்பு

கோலாலம்பூர், அக் 25- நாட்டில் இம்மாத இறுதியில் வானிலை மோசமாக காணப்படும் என சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் தகவலை மலேசிய வானிலை ஆய்வுத் துறை மறுத்துள்ளது.

தீபகற்ப மலேசியா, வடக்கு சரவா மற்றும் மேற்கு சபாவில் அக்டோபர் இறுதி வரை காற்றின் செறிவு காரணமாக நாட்டில் ஈரப்பதமான வானிலை நிலவும் என்பதை தாங்கள் மேற்கொண்ட சமீபத்திய கண்காணிப்பு காட்டுவதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் முகமது ஹெல்மி அப்துல்லா கூறினார்.

அதே சமயம், பிலிப்பைன்ஸ் நாட்டின் மேற்கில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம் நாட்டின் பிராந்தியங்களிலிருந்து மேற்கு மற்றும் வடக்கில் நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இதனால் கடல் சார்ந்த பகுதிகளில் சிறிது தாக்கம் ஏற்படும் என்றும் அவர் சொன்னார்.

அக்டோபர் மாதம் முதல் காண்டோர், ரீஃப் நோர்த் மற்றும் லாயாங் லாயாங கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோ மீட்டராகவும் அலைகள் 3.5 மீட்டர் வரையிலும் உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தால் அது குறித்து வானிலை ஆய்வுத் துறை அறிவிக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :