ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

மலிவு விற்பனை மீண்டும் ஆரம்பம்- ஒன்பது இடங்களில் நாளை நடைபெறுகிறது

ஷா ஆலம், அக் 25- தீபாவளியை முன்னிட்டு இரு தினங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநில அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை நாளை தொடங்கி மீண்டும் நடைபெறவுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருள்களை சந்தையை விட குறைவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் இந்த மலிவு விற்பனை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் கூறியது.

பாயா ஜெராஸ், செமினி, பண்டான் இண்டா, உலு கிளாங், ரவாங், பெர்மாத்தாங், சுங்கை பாஞ்சாங், செமெந்தா ஆகிய தொகுதிகளில் இந்த விற்பனையை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் சமையல் எண்ணெய் (5 கிலோ) 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படும்.

மாநிலத்தின் 56 தொகுதிகளில் உள்ள 160 இடங்களில் இந்த மலிவு விற்பனையை நடத்த மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறும்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த மலிவு விற்பனையின் வாயிலாக இதுவரை 80,000 பேர் பயனடைந்துள்ளனர்.


Pengarang :