ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

பொதுத் தேர்தலின் போது வானிலையை இப்போதைக்கு கணிக்க முடியாது- வானிலை ஆய்வுத் துறை கூறுகிறது

கோலாலம்பூர், அக் 27- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 15வது பொதுத் தேர்தலின் போது வானிலை எவ்வாறு இருக்கும் என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது என்று வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது.

இம்மாதம் 3 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் வரை நீடிக்கும் பருவமழையின் நகர்பு கட்டத்தில் நாடு இன்னும் உள்ளதால் அப்போது வானிலை எவ்வாறு இருக்கும் என்பதை நிர்ணயிக்க இயலாத சூழல் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (வியூக மற்றும் நுட்ப) பிரிவு துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் முகமது ஹிஷாம் முகமது அரிப் கூறினார்.

வரும் நவம்பர் 5 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ள நிலையில் இன்னும் பத்து நாட்கள் இடைவெளி உள்ளது. அன்றைய தினம் வானிலை நன்றாக இருக்குமா அல்லது மோசமாக இருக்குமா என்பதை தீர்மானிப்பது கடினம் என்றார் அவர்.

எனினும், வேட்பு மனுத்தாக்கலுக்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்னர் வானிலை தொடர்பான தகவல்களை தருவதற்கு முடிந்த அளவு நாங்கள் முயற்சி செய்கிறோம் என்று அவர் சொன்னார்.

பெர்னாமா டிவியின் பெத்தாங் மலேசியா நிகழ்வில் ஒளிபரப்பான “நிச்சயமற்ற வானிலையும் விளைவுகளும்“ எனும் தலைப்பிலான பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பருவமழை காலத்தில் வானிலையில் பெரிதும் மாற்றம் இராது எனத் தாங்கள் நம்புவதாக குறிப்பிட்ட அவர், இம்மாதம் வரை பெரும்பாலான மாநிலங்களில் மழைப்பொழிவு வழக்கமான அளவில் உள்ளதாக குறிப்பிட்டார்.

இணையவாசிகள் வெளியிடும் வானிலை தொடர்பான தகவல்களை நம்பவேண்டாம் என்றும் உண்மையான வானிலை நிலவரங்களை அறிந்து கொள்ள வானிலை ஆய்வுத் துறையை அணுகும்படியும் பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :