ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

மலிவான  விலையில் தரமான பொருள்களை வழங்கும் ஏசான் ராக்யாட் திட்டம்- பொதுமக்கள் புகழாரம்

உலு கிளாங், நவ 2- ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தின் கீழ் மலிவான விலையில் தரமான பொருள்கள் வழங்கப்படுவது குறித்து பொது மக்கள் திருப்தி அடைந்துள்ளனர்.

இந்த விற்பனையில் பயனீட்டாளர்களின் தேவைகேற்ப பெரிய கோழிகள் குறைந்த விலையில் கிடைப்பதாக தனியார் துறை பணியாளரான முகமது ஹபிசுடின் ரஸியான் (வயது 31) கூறினார்.

இந்த விற்பனைத் திட்டத்தில் விற்கப்படும் கோழி, இறைச்சி, சமையல் எண்ணெய் போன்ற பொருள்கள் தரமானவையாக உள்ளதை காண முடிகிறது. சுமார் 2 கிலோ எடை கொண்ட கோழி வெறும் 10.00 வெள்ளிக்கே விற்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

மிகவும் பயன்மிக்க இத்திட்டம் அவ்வப்போது அல்லாமல் தினசரி நடத்தப்பட வேண்டும் என்று நேற்று இங்கு நடைபெற்ற மலிவு விற்பனையின் போது அவர் குறிப்பிட்டார்.

இந்த விற்பனைத் திட்டத்தின் மூலம் சமையல் பொருள்களை வாங்குவதற்கு உண்டாகும் செலவை பெருமளவில் குறைக்க முடிந்துள்ளதாக தாமான் கிராமாட்டைச் சேர்ந்த கு சனிஷா கு சஹாட் (வயது 52) தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடிகிறது. சந்தை அல்லது மளிகைக் கடைகளில் வாங்குவதைக் காட்டிலும் இங்கு விலை மிக குறைவாக உள்ளது. மக்கள் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக இந்த திட்டம் தொடர்நது நடத்தப்பட வேண்டும என்பது எனது எதிர்பார்ப்பாகும் என்றார் அவர்.

இதனிடையே, இத்திட்டம் குறித்து கருத்துரைத்த பொறியாளரான முகமது அமார் அபிப் ஜைனால் (வயது 32) குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் இத்திட்டத்தின் மூலம் மிகுந்த பயனைப் பெற இயலும் என்று சொன்னார்.

இன்றைய நிலையில் வாழ்க்கைச் செலவினம் மிகவும் அதிகரித்து விட்டது. குறைந்த விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய மாற்றுத் திட்டமாக இது விளங்குகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :