Pengerusi Pakatan Harapan (HARAPAN) Datuk Seri Anwar Ibrahim bersama barisan pimpinan meletakkan tangan pada bola kaca ketika melancarkan Tawaran HARAPAN Kita Boleh di Wyndham Acmar Klang pada 2 November 2022. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

ஹராப்பான் தேர்தல் கொள்கையறிக்கையில், நாட்டை மேம்படுத்தி, நாட்டு வளத்தை மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகள்!

ஷா ஆலம், நவ 2- வரும் 15வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டை ஆளும் பட்சத்தில் வாக்காளர்களுக்குப் பயன்தரக் கூடிய கவர்ச்சிகரமான 39 வாக்குறுதிகளைப் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி இன்று வெளியிட்டது.
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற நிரந்தரத் தவணைச் சட்டம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் மற்றும் வேலை இழந்தவர்களுக்குச் சிறப்பு அலவன்ஸ் ஆகியவை மக்களைப் பெரிதும் ஈர்க்கக்கூடிய வாக்குறுதிகளில் சிலவாகும்.
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் கொள்கையறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை https://kitaboleh.my/  என்ற அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இந்தக் கொள்கையறிக்கையில் சில புதிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ள வேளையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் சில மேம்படுத்தப்பட்டுள்ளன.

Pengerusi Pakatan Harapan (HARAPAN) Datuk Seri Anwar Ibrahim berucap ketika Majlis Peluncaran Tawaran HARAPAN di Hotel Wyndham Acmar Klang pada 2 November 2022. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ஹராப்பான் கூட்டணி சில தலைப்புகளின் கீழ் வெளியிட்டுள்ள வாக்குறுதிகள் வருமாறு-
வாழ்க்கைச் செலவின விவகாரத்தைக் கையாளுதல்
 • உணவு விநியோகத் துறையில் போட்டி ஆற்றலை வலுப்படுத்துவதற்கும் கொள்ளை லாபத்தைத் தடுப்பதற்கும் ஏதுவாகக் கார்டல் எனப்படும் முறையற்ற வணிகக் கூட்டமைப்பு முறை அகற்றப்படும்
• உணவுப் பொருள் விநியோகம் குறிப்பாகப் பெருநாள் காலங்களில் சீராக இருப்பதை உறுதி செய்ய உற்பத்தியாளர்களுடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும்.
• விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக உணவுப் பொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்
• டோல் கட்டணத்தைக் குறைக்கவும் கட்டங்கட்டமாக அதனை அகற்றவும் நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும்.
வறுமை ஒழிப்பு
• அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் வாழ்க்கைச் செலவின உதவியும் இலவசக் காலை உணவும் தொடர்ந்து வழங்கப்படும்
• கட்டுப்படி விலை வீட்டுடமைத் திட்டம், கட்டுப்படி வாடகை வீட்டுத் திட்டம், மலிவு விலை மற்றும் நடுத்தர மலிவு விலை வீட்டுடமைத் திட்டம் மற்றும் டிரான்சிட் திட்டம் உருவாக்கப்படும்
தொழிலாளர் நலனுக்கு உத்தரவாதம்
• உயர்ந்த வருமானம் கொண்ட நாடாக உயர்த்தும் இலக்கிற்கேற்பக் குறைந்த பட்சம் சம்பளக் கொள்கை அமலாக்கம் செய்யப்படும்
• வேலை இழந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு அலவன்ஸ் திட்டம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்
• தொழிலாளர் சேம நிதி வாரியம், பெர்காசா ஐ-சரஹான் மற்றும் மூன்றாம் தரப்பு சந்தா செலுத்தும் முறை இயல்பாகப் பதிவு செய்யப்படுவது நடைமுறைப்படுத்தப்படும்
இளைஞர்களின் பொருளாதார வாய்ப்புகள் வலுப்படுத்தப்படும்
• தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தின் கடனுதவி அடிப்படையில் பி40 தரப்பு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படும்
மகளிர் மற்றும் குடும்ப அமைப்பு முறை வலுப்படுத்தப்படும்
• வேலைக்குச் செல்லும் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மற்றும் நடுத்தரத் தரப்பைச் சேர்ந்த மகளிருக்குக் குழந்தை பராமரிப்புக்காக உதவித் தொகை வழங்கப்படும்.
வயதான காலத்தில் சௌகரிய வாழ்க்கை 
• நூறு வெள்ளிக்கான ஷோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டு, 1,000 வெள்ளி மரணச் சகாய நிதி மற்றும் உள்நாட்டு சுற்றுலா மையங்களுக்கு இலவசப் பஸ் சேவை வழங்கப்படும்
ஊழல் ஒழிப்பு
• மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையர் பதவிக்கான நியமனம் இரு கட்சி நாடாளுமன்றச் சிறப்பு தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்
அரசு நிர்வாகத்தில் உயர்நெறியைப் பேணுதல்
• பிரதமர், அமைச்சர்கள், மந்திரி புசார்கள் மற்றும் முதலமைச்சர்களின் பதவி காலம் கூடுதல் பட்சம் 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்படும்
• நாடாளுமன்றமும் சட்டமன்றமும் தவணை காலம் முடிந்த பின்னரே கலைக்கப்படும் வகையில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தவணை நிரந்தரச் சட்டம் இயற்றப்படும்
சுகாதாரச் சீர்திருத்தம்
• அடுத்த ஐந்தாண்டுகளில் சுகாதாரத்திற்கான செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து விழுக்காடாக உயர்த்தப்படும்
• மைசலாம் பாதுகாப்புத் திட்டம் நடுத்தர வருமானம் கொண்ட (எம்40) தரப்பினருக்கும் விரிவுபடுத்தப்படும்.
கல்விச் சீர்திருத்தம்
• தேவைப்படும் அனைத்துத் தரப்பினருக்கும் வழங்குவதற்கு ஏதுவாகக் காலைச் சிற்றுண்டித் திட்டத்திற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்
• கடந்த 2020 மற்றும் 2021 கோவிட்-19 காலக்கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட வீட்டிலிருந்து கல்வி கற்கும் கொள்கை காரணமாக உண்டான 3எம் (எண், எழுத்து,வாசிப்பு) ஆற்றலை மேம்படுத்துவதற்குச் சிறப்பு நிதி ஒதுக்கப்படும்
• தேசிய உயர்கல்விக் கடனுதவி நிதிக் கழகத்தின் (பி.டி.பி.டி.என்.) கடன் தொடர்பில் ஏழைகள் மற்றும் பி40 தரப்பை இலக்காகக் கொண்ட மன்னிப்பு திட்டம் அமல் படுத்தப்படும்
விளையாட்டு பொருளாதாரத்திற்குப் புத்துயிர்
• கொள்கைகள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான விவாதங்கள் வாயிலாக மின்-விளையாட்டு சூழியல் முறை மேம்படுத்தப்படும்
மலேசிய மக்களின் மக்களின் சுபிட்சம் மற்றும் போட்டித் தன்மை உறுதி செய்யப்படும்
• சமூகப் பொருளதார மேம்பாட்டிற்காக அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன் படுத்துத்துதல் போன்ற செயல்களை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படும்
சபா, சரவாக் மற்றும் தீபகற்ப மலேசியாவுக்கிடையிலான மேம்பாட்டு இடைவெளி குறைக்கப்படும்
• சபா மற்றும் சரவாக் மாநிலங்களைப் பிரதிநிதித்து ஒருவர் உள்பட இரு துணைப் பிரதமர்கள் பதவி உருவாக்கப்படும்
1963ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்த அமலாக்கம் வாயிலாகச் சபா மற்றும் சரவாக் பிரதேசம் மேம்படுத்தப்படும்
• நாடாளுமன்ற உறுப்பினர்களில்  35 விழுக்காட்டினர் சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பது உறுதி செய்யப்படும்
சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு அதிகாரம் பரலாக்கப்படும்
• மத்திய, மாநில அரசு துறைகளில் குறிப்பாக மேல் மட்டத்தில் 70 விழுக்காட்டு வேலை வாய்ப்பு சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.

Pengarang :