ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பேராக்கில் 21 சட்டமன்றத் தொகுதிகளில் கெஅடிலான் போட்டி- 17 பேர் புதுமுகங்கள்

ஈப்போ, நவ 4- வரும் பதினைந்தாவது  பொதுத் தேர்தலில் பேராக்கில் 21 சட்டமன்றத் தொகுதிகளில்  கெஅடிலான் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது. அவர்களில் 17 புதுமுகங்கள் ஆவர்.

அந்த 21 தொகுதிகளில் ஒன்றான ஊத்தாங் மெலித்தாங்கில் இக்கட்சி சார்பில் எஸ்.வசந்தி களமிறக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வேட்பாளர்களில் 11 பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் அவர்களில் கெனெரிங் தொகுதியில் போட்டியிடும் 28 வயதான முகமது ஜாமேயான் ஜூல்கிப்ளியே மிகவும் இளம் வயதுடையவர் என்றும் மாநில கெஅடிலான் தலைவர் சாங் லீ காங் கூறினார்.

வேட்பாளர்களில் ஐவர்  போதனையாளர்கள் மற்றும் அமைச்சின் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய முன்னாள் அரசு ஊழியர்களாவர். மேலும் இம்முறை ஐந்து தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

மாநிலத்தில் வெற்றி பெற்று பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியமைப்பதற்குரிய வாய்ப்பு கிடைத்தால் கட்சித் தாவல் தடைச் சட்டம் அமலாக்கம் தங்களின் பிரதான இலக்காக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அனைத்து வேட்பாளர்களும் உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதோடு சொத்துக்களையும் அறிவித்துள்ளனர். இதன் மூலம் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு துரோகமிழைத்து விட்டு கட்சித் தாவ முடியாது. அவ்வாறு செய்தால் பெரும் தொகையை அவர்கள் இழப்பீடாக வழங்க வேண்டி வரும் என்றார் அவர்.

பக்கத்தான் ஹராப்பான் சார்பாக மந்திரி புசார் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு இன்னும் காலம் கனியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :