ECONOMYMEDIA STATEMENT

தஞ்சோங் காராங்கில் உடைந்த அணையை சீரமைக்கும் பணியில் ஜேபிஎஸ் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது

ஷா ஆலம், நவ 7: தஞ்சோங் காராங் அரிசி ஆலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு,  உடைந்த அணை காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த அணையை சீரமைக்கும் பணியில் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சுங்கை திங்கி, தஞ்சோங் காராங் ஆற்று கரைகள் நிரம்பி வழிந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக ஜேபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேபிஎஸ் படி, இன்று அதிகாலை 4 மணியளவில் சுங்கை திங்கி ஆற்று தடுப்பு அணைக்கும் மேல் நீர் வழிந்தோட ஆரம்பித்ததைத் தொடர்ந்து, அவர்கள் சுங்கை திங்கி அணையில் பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டனர், ஆனால் வலுவான நீர் அழுத்தம் காரணமாக ஆரம்பத்தில் சிறியதாக இருந்த நீர் பெருக்கு பெரிதாக மாறியது.

அதைத் தொடர்ந்து, 10 கனஅடி கொள்ளளவு கொண்ட நடமாடும் பம்ப் உடனடியாக இயக்கப்பட்டு, நீர் இறைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று, இன்று காலை 8 மணிக்கு அருகில் உள்ள மதகு திறக்கப்பட்டது.

இன்று அதிகாலை பெக்கான் தஞ்சோங் காராங்கைச் சுற்றி உள்ள சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பம் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நான்கு வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் பக்கத்து வீட்டுக்கு மாற்றப்பட்டதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இன்று அதிகாலை நகரைச் சுற்றி ஒரு மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது என்றும் சிலாங்கூர் தீயணைப்பு இயக்குனர் நோரஸாம் காமிஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


Pengarang :