ECONOMYSELANGOR

கோம்பாக் தொகுதிக்கு சிறப்புத் திட்டம்- நாளை அறிவிக்கப்படும்

கோம்பாக், நவ 9- கோம்பாக் தொகுதிக்கு பிரத்தியேக திட்டம் ஒன்று நாளை அறிவிக்கப்படும். ஏற்கனவே பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வெளியிட்ட பத்து அம்ச தேர்தல் கொள்கை அறிக்கைக்கு உபரியாக இந்த திட்டம் அறிவிக்கப்படுகிறது.

வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் அத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்ற செய்தி தமது தரப்பு தொடர்ந்து வெளியிட்டு வருவதாக ஹராப்பான் கூட்டணி வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஹராப்பான் கூட்டணி வாயிலாக நாம் 10 வாக்குறுதிகளை வழங்கியுள்ள போதிலும் கோம்பாக் மக்களுக்காக நான் உருவாக்கியுள்ள சிறப்பு திட்டம் குறித்து வியாழக்கிழமை விளக்கமளிப்பேன் என்று நேற்று ஆஸ்ட்ரோ அவானிக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.

கோம்பாக் தொகுதிக்கான நான்கு வேட்பாளர்கள் அடங்கிய தேர்தல் ஆணையத்தின் வாக்குச் சீட்டில் கெ அடிலான் உதவித் தலைவருமான அமிருடினுக்கு இரண்டாவது எண் கிடைத்துள்ளது.

இத்தொகுதியில் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலியிடமிருந்து அவர் கடுமையான போட்டியை எதிர்நோக்குகிறார்.

மக்களின் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை கையாள்வது, ஊழலை ஒழிப்பது உள்ளிட்ட பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் பத்து அம்ச தேர்தல் கொள்கை அறிக்கையை ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த நவம்பர் 2ஆம் தேதி வெளியிட்டார்.


Pengarang :