ECONOMYSELANGOR

அம்பாங்கில் மழைக்கு மத்தியிலும் ரோட்சியா தீவிர பிரசாரம்- சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களை அணுகுகிறார்

அம்பாங், நவ 9- அம்பாங் தொகுதி தொடர்ந்து பக்கத்தான் ஹராப்பான் வசம் இருப்பதை உறுதி செய்வதற்காக தொகுதி வேட்பாளர் ரோட்சியா இஸ்மாயில் கடும் மழைக்கு மத்தியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மூன்று தவணைகளாக பத்து தீகா சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனுபவத்தை கொண்டுள்ள அவர், சற்றும் தளராமல் களத்தில் இறங்கி பொது மக்கள் மத்தியில் வாக்குகளை வேட்டையாடி வருவதோடு எந்த சூழ்நிலையிலும் மக்களுடன் தொடர்பில் இருப்பதற்கான மாற்று வழிகளையும் ஆராய்ந்து வருகிறார்.

மழைக்கு மத்தியில் தற்போது நாங்கள் பாசார் மாலாம் பகுதியில்  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று அம்பாங் பண்டார் பாரு பாசார் மாலாம் பகுதியில் பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இம்முறை நாம் ஆக்கத்திறனுடன் இருக்க வேண்டியுள்ளது. சூழ்நிலைகள் அனுமதிக்காத போது வாக்காளர்களை அணுக சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

நேற்று தொடங்கி வரும் நவம்பர் 11ஆம் தேதி வரை சிலாங்கூர் உள்ளிட்ட மலேசியாவின் மேற்கு கரை மாநிலங்களில் மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

முன்னதாக, தாமான் அம்பாங் இண்டா, பங்சாபுரி கம்போஜா மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பாளர்களை சந்தித்த ரோட்சியா, அவர்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார்.

இந்த தேர்தலில் பார்ட்டி பங்சா மலேசியா சார்பில் போட்டியிடும் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஜூரைடா கமாருடினை எதிர்த்து ரோட்சியா களம் காண்கிறார். இவ்விருவர் தவிர தேசிய முன்னணி, பெரிக்கத்தான் நேஷனல் பெஜூவாங், வாரிசான்  வேட்பாளர்களுடன் மூன்று சுயேச்சைகளும் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.


Pengarang :