ECONOMYSELANGOR

பொதுத் தேர்தலுக்குப் பின் பாரிசானுடன் இணைந்து அரசாங்கம் அமைக்க பெரிக்கத்தான் நேஷனல் தயார்- தாக்கியுடின் 

ஷா ஆலம், நவ 15- பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாரிசான் நேஷனலுடன் (தேசிய முன்னணி) இணைந்து அரசாங்கம் அமைக்க பெரிக்கத்தான் நேஷனல் தயாராக உள்ளது.

தேசிய முன்னணியிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் இந்த இணைப்பை அது ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தாக்கியுடினுடன் ஹசான் கூறினார்.

எங்களின் முதல் இலக்கு தேசிய முன்னணிதான். பிரசார காலத்தில் இதன் தொடர்பான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. எங்களின் இந்த பரிந்துரையை தேசிய முன்னணி ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டது. நாம் அவர்களுடன் கூட்டணி வைக்காத போதிலும் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஒன்றிணைந்து செயல்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றார் அவர்.

நேற்று கம்போங் கியாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய முன்னணியும் பெரிக்கத்தான் நேஷனலும் கடந்த 2020 பிப்ரவரி முதல் கூட்டாக ஆட்சி நடத்தி வந்தன. எனினும் இப்பொதுத் தேர்தலில் அவை தனித்தனி சின்னங்களில் போட்டியிடுகின்றன.


Pengarang :