ECONOMYNATIONAL

ஹராப்பானின் மக்கள் நலன் காக்கும் திறனுக்கு சிலாங்கூர் அரசின் வெற்றி சிறந்த எடுத்துக்காட்டு

ஷா ஆலம், நவ 15- பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி நாட்டை சிறப்பான முறையில் வழி நடத்தும் என்பதற்கு கடந்த 2008 முதல் மக்கள் நலனை செவ்வனே காத்து வரும் சிலாங்கூர் ஹராப்பான் அரசின் வெற்றி சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

அந்த கூட்டணியின் சிறப்பான அடைவு நிலையை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட காலம் உள்பட கடந்த 14 ஆண்டு கால சேவையின் அடிப்படையில் மதிப்பிட முடியும் என்று சிலாங்கூர் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சுமார் 20,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 60 லட்சம் வெள்ளி செலவில் அமல்படுத்தப்பட்ட இலவச டியூஷன் திட்டம், பிறந்த குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலாக காப்புறுதி பாதுகாப்புத் திட்டம் ஆகியவை மாநில அரசின் திட்டங்களில் அடங்கும் என அவர் சொன்னார்.

குறுகிய காலத்தில் இத்தகைய திட்டங்களை நிறைவேற்ற இயலாது. சிலாங்கூரில்கூட  இதனை சாதிப்பதற்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டன என்று தாமான் சவுஜானா உத்தாமாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிலாங்கூர் மந்திரி பெசாருமான அவர் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் சிலாங்கூர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

ஹராப்பானின் சாதனைகளைக் காண வேண்டுமானால் 22 மாதங்களைப் பார்க்காதீர்கள். 14 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் சிலாங்கூரைப் பாருங்கள். இக்காலக்கட்டத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையும் மக்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது என்றார் அவர்.

இந்த பிரசாரக் கூட்டத்தில் கெஅடிலான் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் இஸ்மாயில் நசுத்தியோன் சுங்கை பூலோ தொகுதி ஹராப்பான் வேட்பாளர் டத்தோ ஆர். ரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமிருடின், கடந்த 2021ஆம் ஆண்டில் நாட்டின மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24.8 விழுக்காட்டு பங்களிப்பை சிலாங்கூர் வழங்கியதாக குறிப்பிட்டார். கடந்த 2017இல் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மந்திரி புசாராக இருந்தபோது சிலாங்கூரின் பங்களிப்பு 23.2 விழுக்காடாக மட்டுமே இருந்ததாக அவர் சொன்னார்.


Pengarang :