ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கை புவாயா நிலப் பிரச்சனைக்குத் தீர்வு- 3,580 பேர் நிலப்பட்டா பெறுவர்

உலு சிலாங்கூர், நவ 16-  பண்டார் சுங்கை புவாயாவைச் சேர்ந்த 3,580 பேர் நில உரிமைக்கான ஒப்புதல் கடிதங்களை கட்டங் கட்டமாகப் பெறுவர். கடிதங்களை வழங்கும் பணி வரும் மார்ச் மாதம் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான கடப்பாட்டை தாங்கள் கொண்டுள்ளதாக கூறிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இதன் வழி நிலப்பட்டா பெறுவதற்கு அவர்கள் நடத்திய 24 ஆண்டுகாலப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது என்றார்.

முதல் கட்டமாக இன்றைய நிகழ்வில் பண்டார் சுங்கை புவாயாவை சேர்ந்த 100 பேர் நில உரிமைக்கான அங்கீகாரக் கடிதங்களைப் பெறுகின்றனர். மற்ற குடியிருப்பாளர்களுக்கு இக்கடிதங்களை வழங்கும் பணி அடுத்தாண்டு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கம் வரை மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

கடந்த 2018 மற்றும் கடந்தாண்டு நவம்பரில் அந்த நிலத்தின் மீது போடப்பட்ட கேவியட்  தடை நீதிமன்ற நடவடிக்கை மூலம் அகற்றப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

அப்பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதில் காட்டப்பட்ட அலட்சியம் மற்றும் தோல்வி காரணமாக குடியிருப்பாளர்களின் நில உரிமை பாதிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :