ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பீர்- மனித வள அமைச்சர் வலியுறுத்து

கோலாலம்பூர், நவ 16- மலேசியர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி தனியார் துறையினரை மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள  பொதுத் தேர்தலில் மலேசியர்கள் திரண்டு வந்து வாக்களிப்பதை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு இந்த விடுமுறையை வழங்கியுள்ளதாக அவர் சொன்னார்.

அரசாங்கம் 1951ஆம் ஆண்டு பொது விடுப்பு சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் (சட்டம் 369) இந்த பொது விடுமுறையை பிரகடனப்படுத்தியுள்ளது. தனியார் துறையினருக்கு 1955ஆம் ஆண்டு வேலைச் சட்டத்தின் 60டி(1)(பி) பிரிவின் கீழ் விடுமுறை வழங்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த தினங்களுக்கு மாற்றாக வேறு நாட்களை ஊழியர்களுக்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக முதலாளிகள் மாற்றிக் கொள்ள இச்சட்டம் வகை செய்கிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

வரும் 18 மற்றும் 19ஆம் தேதி விடுமுறை வழங்குவதா? அல்லது வேறு தினங்களுக்கு அந்த விடுமுறையை மாற்றுவதா என்பதை  சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு முதலாளிகள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.


Pengarang :