ECONOMYSELANGOR

பொது மக்கள் வாக்களிப்பு மையங்களுக்குச் செல்ல இலவச போக்குவரத்து வசதி- சிப்பாங் ஹராப்பான் ஏற்பாடு

சிப்பாங், நவ 17- பொது மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக வாக்களிப்பு மையங்களுக்குச் செல்ல சிப்பாங் தொகுதி ஹராப்பான் இலவச போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தருகிறது.

போக்குவரத்து வசதி தேவைப்படும் பகுதிகளை சுங்கை பீலேக், தஞ்சோங் சிப்பாட் மற்றும் டிங்கில் சட்டமன்றத் தொகுதிகளின் ஹராப்பான் தேர்தல் இயந்திரங்கள் அடையாளம் கண்டுள்ளதாக சிப்பாங் தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் அய்மான் அதிரா சாபு கூறினார்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்தது 15 வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளோம். வாக்காளர்களை வாக்களிப்பு மையங்களுக்கு ஏற்றிச் செல்லும் பணியில் இந்த வாகனங்கள் நாள் முழுவதும் ஈடுபடும். தேவையின் அடிப்படையில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

மாற்றுத் திறனாளி வாக்காளர்களின் வசதிக்காக சக்கர நாற்காலிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம் என்று நேற்று கம்போங் தஞ்சோங் சிப்பாட்டில் நடைபெற்ற வாக்காளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் அவர் குறிப்பிட்டார்.

மொத்தம் 167,988 வாக்காளர்கள் கொண்ட சிப்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் 50 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக சிப்பாங் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் அதிகாரி டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறியிருந்தார்.


Pengarang :