ECONOMYSELANGOR

 சுற்றுலாவை ஊக்குவிப்பது உள்பட 9 வாக்குறுதிகள்- உலு சிலாங்கூர் ஹராப்பான் வேட்பாளர் வெளியிட்டார்

உலு சிலாங்கூர், நவ 17- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலை முன்னிட்டு உலு சிலாங்கூர் தொகுதிக்கான ஒன்பது அம்ச தேர்தல் கொள்கையறிக்கையை ஹராப்பான் வேட்பாளர் வெளியிட்டுள்ளார்.

வேளாண் துறை மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதும் அந்த வாக்குறுதிகளில் அடங்கும் என்று தொகுதி வேட்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் கூறினார்.

அத்தொகுதியில் பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் இளையோர் மத்தியில் காணப்படும் வேலையில்லாப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக விவசாயத் துறை மேம்படுத்தப்படும் என்பதோடு வேளாண் துறையை பல்வகைப்படுத்தி விற்பனை மையத்தை உருவாக்குவதிலும் முனைப்பு காட்டப்படும் என்றார் அவர்.

விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு பகுதிகளுக்கு வருகை புரிவதன் மூலம் அத்துறை சார்ந்தவர்களுடன் இணைந்து செயல்பட்டு உபரி வருமானத்தைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை சுற்றுப்பயணிகள் பெற முடியும் என்று அவர் மேலும் சொன்னர்.

இத்தகைய நடவடிக்கைகளின் வாயிலாக மறைமுகமாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். மேலும், தொழில் முனைவோர் துறைகளில் இளைஞர்கள் கால் பதித்து பொருளாதார ரீதியாக அவர்கள் தங்களை வலுப்படுத்திக் கொள்ள இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

இது போன்ற முன்னெடுப்புகளின் வாயிலாக இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்குச் செல்வதை தடுத்து இங்கேயே வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு சாத்தியம் உண்டாகும். தற்போது பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடி கோலாலம்பூர் செல்கின்றனர் என்று அவர் சொன்னார்.


Pengarang :