ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாடாங் செராய், தியோமான் தொகுதிகளில் நாளை வேட்பு மனுத் தாக்கல்

கோலாலம்பூர், நவ 23- கெடா மாநிலத்தின் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பகாங் மாநிலத்தின் தியோமான் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை ஏக காலத்தில் நடைபெறவுள்ளது.

பதினைந்தாவது பொதுத் தேர்தலையொட்டி கடந்த 19ஆம் தேதி நடத்தப்படவிருந்த இவ்விரு தொகுதிகளுக்கான தேர்தல் தொகுதி வேட்பாளர்களின் திடீர் மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

பாடாங் செராய் தொகுதி உறுப்பினரும் ஹராப்பான் வேட்பாளருமான எம். கருப்பையா (வயது 69) கடந்த நவம்பர் 14 ஆம் தேதி கூலிம் மருத்துவமனையிலும் தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமது யூனுஸ் ரம்லி கடந்த 16ஆம் தேதி தேர்தல் பிரசார காலத்தின் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவும் மரணமடைந்தனர்.

பாடாங் செராய் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் கூலிம் காம்ப்ளெக்ஸ் சுக்கான் ஹை-டெக் மண்டபத்திலும் தியோமான் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் ரொம்பின், சுல்தான் ஹாஜி அகமது ஷா ஜூப்ளி பேராக் மண்டபத்திலும் நாளை காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும்.

இவ்விரு தொகுதிகளுக்கான  வாக்களிப்பு தினமாக டிசம்பர் 7ஆம் தேதியை தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. தொடக்க வாக்களிப்பு வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் டிசம்பர் 6ஆம் தேதி இரவு 11.59 மணி வரை 13 நாட்களுக்கு நடைபெறும்.

 


Pengarang :