ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போலி வேலை பெர்மிட்டுகள் விற்பனை- மூன்று வங்காளதேச பிரஜைகள் கைது

ஷா ஆலம், டிச 1- சக நாட்டினருக்கு போலி வேலை பெர்மிட்டுகளை தயாரித்து விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் மூன்று வங்காளதேச ஆடவர்களை போலீசார் ஷா ஆலம் வட்டாரத்தில் கைது செய்தனர்.

இங்குள்ள செக்சன் 26, கம்போங் பாரு ஹைக்கோமில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சோதனையில் 20 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஹைக்கோம் கிளன்மேரி தொழில் பேட்டையில் வேலை செய்து வரும் அவ்விரு ஆடவர்களும் இவ்வாண்டு அக்டோபர் முதல் போலி வேலை பெர்மிட் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார்.

இவ்விரு சந்தேகப்பேர்வழிகளும் போலி பெர்மிட்டுகளை விரைவாகவும் மலிவான விலையிலும் விற்பனை செய்து வந்துள்ளனர். 200 வெள்ளி மதிப்பிலான இந்த போலி பெர்மிட்டுகளை பெரும்பாலும் வங்காளதேச நாட்டினரே வாங்கியுள்ளனர் என்று அறிக்கை ஒன்றில் இக்பால் தெரிவித்தார்.

இந்த சந்தேக நபர்களிடமிருந்து மடிக்கணினி, பிரிண்டர் இயந்திரம், மூன்று கடப்பிதழ்கள், 10 தற்காலிக வேலை அனுமதி அட்டை மற்றும் நான்கு கைபேசிகளை கைப்பற்றப்பட்டன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்விருர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோசடியில் தொடர்புடயவர் என நம்பப்படும் 30 வயது மதிக்கத்தக்க மூன்றாவது ஆடவர் நேற்றிரவு ஷா ஆலம், மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சரணடைந்ததாக அவர் கூறினார்.

தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட இரு ஆடவர்களும் குற்றவியல் சட்டத்தின் 420 பிரிவின் கீழ் விசாரணைக்காக வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் மூன்றாவது நபர் தடுப்புக் காவல் அனுமதிக்காக இன்று நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார் என்றார் அவர்.


Pengarang :