ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மத்திய அரசு வசமுள்ள தொழில்பேட்டை சாலைகளை கையகப்படுத்த சிலாங்கூர் திட்டம்

ஷா ஆலம், டிச 1- பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் தொழில்பேட்டை பகுதிகளில் உள்ள கூட்டரசு  சாலைகளை கையகப்படுத்தி ஊராட்சி மன்றங்கள் வசம் ஒப்படைக்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.

அப்பகுதிகளிலுள்ள சாலைகளில் ஏற்படும் பழுதை சரி செய்வதற்கு ஊராட்சி மன்றங்களிடம் நிதி ஒதுக்கீடு இருக்கும் காரணத்தால் அச்சாலைகளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

சில சாலைகளை பொதுப்பணித் துறை முழுமையாக பராமரித்து வரும் காரணத்தால் சம்பந்தப்பட்ட சாலைகளை ஊராட்சி மன்றங்களிடம் ஒப்படைப்பதற்கு முன் அவற்றின் அதிகார வரம்பு குறித்து ஆராய சிறிது கால அவகாசம் தேவைப்படும் என அவர் சொன்னார்.

பொதுப் பணித் துறை வசமிருக்கும் சில சாலைகளை கையகப்படுத்துவது தொடர்பில் அத்துறைக்கும் ஊராட்சி மன்றங்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அச்சாலைகளை ஊராட்சி மன்றங்களிடம் ஒப்படைப்பதில் பொதுப்பணித் துறைக்கு பிரச்சனை இருக்கும் என நான் கருதவில்லை என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் இன்று சிஜாங்காங் உறுப்பினர் டத்தோ டாக்டர் யூனுஸ் ஹைரி எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, கைவிடப்பட்ட நிலங்கள் மற்றும் கட்டிடங்களின்  நிலை குறித்து எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த இங், சம்பந்தப்பட்ட இடங்களை மேம்படுத்துவதில் நில அல்லது கட்டிட உரிமையாளர்களும் இதில் தொடர்புடைய தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவதை தமது தரப்பு ஊக்குவிப்பதாகச் சொன்னார்.

இத்தகைய கைவிடப்பட்ட பகுதிகள் சட்டவிரோத குப்பை கொட்டும் மையங்களாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான புகலிடங்களாகவும் மாறாமலிருப்பதை உறுதி செய்ய ஊராட்சி மன்றங்கள் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :