ECONOMYNATIONAL

மக்களவை சபாநாயகர் தேர்வு, பிரதமர் மீதான நம்பிக்கைத் தீர்மானம் டிச.19ஆம் தேதி நடைபெறும்

கோலாலம்பூர், டிச 2- பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் முதலாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடர் இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கி இரு தினங்களுக்கு நடைபெறவுள்ளது.

மக்களவை சபாநாயகர் தேர்வு மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகியவை இந்த கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ள முக்கிய அங்கங்களாக விளங்குகின்றன.

இந்த கூட்டத் தொடரின் தொடக்க நிகழ்வுகளில் ஒன்றாக மக்களவை சபாநாயகர் தேர்வும் பதவியேற்பு சடங்கும் அடங்கும் என நாடாளுமன்றச் செயலாளர் டாக்டர் நிஸாம் மைடின் பாஷா மைடின் அவை உறுப்பினர்களுக்கு அனுப்பிய அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவை சபாநாயகர் பதவியை டான்ஸ்ரீ அஹார் அஜிசான் ஹருண் தற்போது வகித்து வருகிறார்.

நிகழ்ச்சி நிரலின் அடுத்த நிகழ்வாக கடந்த பதினைந்தாவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து 222 உறுப்பினர்களின் பதவியேற்புச் சடங்கு அமைகிறது.

இந்த கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரலின் எட்டாவது அங்கமாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய பிரதமர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இடம் பெறுகிறது.

பிரதமர் என்ற முறையில் தமக்குள்ள ஆதரவு குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் 19ஆம் தேதி கூடும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தாம் உட்படவுள்ளதாக கடந்த மாதம் 24ஆம் தேதி பிரதமராக பதவியேற்றப் பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.


Pengarang :