ECONOMYSELANGOR

இவ்வாண்டு இறுதிக்குள் 400,000 பேருக்கு இலவச குடிநீர் விநியோகம்- சிலாங்கூர் அரசு திட்டம்

ஷா ஆலம், டிச 2- இவ்வாண்டு இறுதிக்குள் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் மாதம் 20 கனமீட்டர் இலவச குடிநீர் விநியோகத் திட்டத்தில் பங்கு பெற மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த ஆயர் டாருள் ஏசான் திட்டத்தில் பங்கு பெறுவதற்கான வருமான வரம்பை மாநில அரசு மாதம் 4,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக அதிகரித்ததைத் தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்வு காணும் என மதிப்பிடப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டத்திற்கு இதுவரை 300,000 பேர் பதிந்துள்ள வேளையில் இந்த எண்ணிக்கையை 600,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதன் அடிப்படையில் இவ்வாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை நான்கு லட்சத்தை தாண்டி விடும் என மாநில சட்டமன்றத்தில் நேற்று அவர் தெரிவித்தார்.

ஆயர் டாருள் ஏசான் இலவச நீர் விநியோகத் திட்டம் 4 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டுடன் அடுத்தாண்டிலும் தொடரப்படும் என்று மந்திரி புசார் கடந்த மாதம் 25ஆம் தேதி கூறியிருந்தார்.

இந்த இலவச குடிநீர் திட்டத்தில் பங்கு பெறுவதற்கு வரும் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் www.airselangor.com  என்ற அகப்பக்கம் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


Pengarang :