ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

இலவச காப்புறுதிக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பம்- 1,584 மனுக்கள் நிராகரிப்பு .

ஆலம், டிச 2- இவ்வாண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இன்சான் எனப்படும் சிலாங்கூர் பொது காப்புறுத் திட்டத்திற்கு 35 லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் அவற்றில் 1,584 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

பிறந்து 30 நாள் ஆன குழந்தை முதல் 80 வயது வரையிலானவர்கள் இந்த இலவச காப்புறுதி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் எனக் கூறிய அவர், விண்ணப்பதாரர்கள் அடையாளக் கார்டில் சிலாங்கூர் மாநில குறியீட்டு எண்ணை அல்லது முகவரியை கொண்டிருக்க வேண்டும் மற்றும் சிலாங்கூர் வாக்காளராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என சொன்னார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று இன்சான் பொது காப்புறுதி திட்டத்தின் மேம்பாடு குறித்து பண்டமாரான் தொகுதி உறுப்பினர் லியோங் தக் சீ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய செந்தோசா உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ்,  மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டம் மற்றும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்ட பயனாளிகளின் தரவுகளைப் பயன்படுத்தி அவர்களை இந்த இன்சான் திட்டத்தில் இயல்பாக பதிவு செய்யலாம் என்று ஆலோசனை கூறினார்.

இதற்கு பதிலளித்த டத்தோ தெங், அவ்விரு திட்ட பயனாளிகளை இயல்பாக இன்சான் திட்டத்தில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை தாங்கள் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.


Pengarang :