ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஆற்றில் கழிவு நீர் கலந்து விவகாரம்- செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது

ஷா ஆலம், டிச 2- நீரில் கலந்துள்ள வாடையின் அளவு (டோன்) தொடச்சியாக மூன்று முறை சுழியத்தைக் காட்டியதைத் தொடர்ந்து செமினி மற்றும் புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு மையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின. அருகிலுள் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு நீர் காரணமாக நெகிரி செம்பிலான், பாத்தாங் பெனார் ஆற்றில் மாசுபாடு ஏற்பட்டது.

இந்த நீர் மாசுபாடு தொடர்பில் லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில நீர் நிர்வாக வாரியத்திற்கு புகார் கிடைத்ததைத் தொடர்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக  சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது நுரையுடன் கூடிய கழிவு நீர் ஆற்றில் கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக இவ்விவகாரத்தை லுவாஸ் மாநில சுற்றுச்சூழல் இலாகாவின் கவனத்திற்கு கொண்டுச் சென்றது என்றார் அவர்.

இச்சம்பவம் சிலாங்கூர் மாநிலத்திற்கு வெளியே உள்ள தொழில்பேட்டையில் நிகழ்ந்த காரணத்தால் இதன் தொடர்பான அடுத்தக் கட்ட நடவடிக்கையை நெகிரி மாநில சுற்றுச் சூழல் இலாகா மேற்க்கொண்டது என்று அவர் தெரிவித்தார்.

சோப்பு நுரை போன்ற கலவை காரணமாக மாசுபட்ட அந்த ஆற்றில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்டன என அவர் சொன்னார்.

இந்த மாசுபாடு காரணமாக ஏற்பட்ட நீர் விநியோகத் தடை சரி செய்யப்பட்டு இன்று காலை 9.30 மணியளவில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீர் வளங்களை மாசுபடுத்தும் தரப்பினர் விஷயத்தில் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது எனக் கூறிய இங், இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு எதிராக 1999 ஆம் ஆண்டு லுவாஸ் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Pengarang :