ANTARABANGSAMEDIA STATEMENTNATIONALPBT

முதியவரை படுகொலை செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

காஜாங், டிச 2- பேரங்காடி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் முதியவர் ஒருவரை படுகொலை செய்ததாக பற்றவைப்புத் தொழிலாளி ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் ஷியாருள் சாஸ்லி முகமது சாய்ன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சின் இங்கிட் சூன் (வயது 51) என்ற ஆடவருக்கு எதிராக இக்குற்றசாட்டு வாசிக்கப்பட்டது. 

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இம்மாதம் 25ஆம் தேதி இரவு 11.50 மணியளவில் செராஸ் 9வது மைல், பண்டார் துன் ஹூசேன் ஓன்னில் உள்ள பேராங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் வோங் கிம் மியாவ் (வயது 71) என்ற முதியவரை படுகொலை செய்ததாக சின் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜனவரி 13ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. துணை பப்ளிக் புரோசிகியூட்டர் நுருள் ஹூஸ்னா இந்த வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவரை பிரதிநிதித்து யாரும் ஆஜராகவில்லை.


Pengarang :