ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

ஆண்டுதோறும் 20,000 பேருக்கும் மேல் புற்றுநோயால் பாதிப்பு- டாக்டர் முரளிதரன் கூறுகிறார்

மலாக்கா, டிச 5- மலேசியாவில் ஒவ்வோராண்டும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் புற்று நோயால் பீடிக்கப்படும் வேளையில் அவர்கள் அனைவரும் சராசரி 40 வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர் என்று மலேசிய தேசிய புற்றுநோய் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம். முரளிதரன் கூறினார்.

எனினும், கடந்த ஈராண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலோர் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாகவும் உள்ளதாக அவர் சொன்னார்.

இளம் வயதினரை புற்றுநோய் அதிகம் தாக்குவது மற்றும் சிறார்களும் இந்நோயினால் அதிகளவில் பாதிக்கப்படுவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆண்களைப் பொறுத்த வரை 10 விதமான புற்றுநோய்களுக்கு பெரிதும் ஆளாகின்றனர். குடல், நுரையீரல், புரோஸ்டேட், மூக்குத் தொண்டைக் குழல், கல்லீரல், சிறுநீர்ப்பை, நிணநீர்ச் சுரப்பி ஆகிய புற்றுநோய் பாதிப்புகளை அவர்கள் எதிர்நோக்குகின்றனர் என்றார் அவர்.

நேற்றிரவு இங்கு  நடைபெற்ற ரிலே ஃபார் லைஃப்- லுமினாரியா 2022 எனும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெண்களைப் பொறுத்த வரை பெருங்குடல் அல்லது குடல் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், நிணநீர்ச் சுரப்பி, தைராய்டு, மார்பக புற்று நோய், இரத்தப் புற்றுநோய், மார்பக புற்று நோய் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று டாக்டர் முரளிதரன் கூறினார்.

எனினும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளாக குறைந்து வருவதாக கூறிய அவர், பள்ளி நிலையில் செலுத்தப்படும் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி இதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது என்றார்.

பல்வேறு புற்றுநோய்களின் தாக்குதலிருந்து மீண்டும் இன்னும் உயிர் வாழந்து கொண்டிருக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 100,000 பேராகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 


Pengarang :