NATIONAL

பாடாங் செராய், தியோமான் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் இன்றிரவு முடிவடைகிறது

கோலாலம்பூர், டிச 6- பதினைந்தாவது பொதுத் தேர்தலை முன்னிட்டு பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் தியோமான் சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கிய தேர்தல் பிரசாரம் இன்றிரவு 11.59 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

நாளை தேர்தல் தினமாக அறிவிக்கப் பட்டுள்ளதால் இதற்கு மேல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேட்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான அனைத்து வகையான கூட்டங்கள், பேரணிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அல்லது சொற்பொழிவுகளை ஆற்ற 1954ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் 26(1) பிரிவின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு ஓராண்டிற்கும் மேற்போகாத சிறை, 5,000 வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

பாடாங் செராய் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் எம்.கருப்பையா மற்றும் பகாங் மாநிலத்தின் தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் முகமது யூனுஸ் ரம்லி ஆகியோர் தேர்தல் பிரசார காலத்தின் போது மரணம் அடைந்த காரணத்தால் அவ்விரு தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது.


Pengarang :