ALAM SEKITAR & CUACA

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிலாங்கூரில் குறைகிறது பேராக், பெர்லிஸில் மாற்றம் இல்லை

ஷா ஆலம், டிச 6: பன்திங்கில் உள்ள கம்பங் புக்கிட் சாங்காங்கில் படிப்படியாக மீண்டு வரும் வெள்ள நிலைமை, தற்காலிக வெளியேற்ற மையத்தில் (பிபிஎஸ்) தங்கியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலரை வீடு திரும்ப தூண்டியுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, பிபிஎஸ் கிராமப் பொது மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நேற்று பிற்பகல் 42 பேராக இருந்தது தற்போது 11 குடும்பங்களை உள்ளடக்கிய 37 பேராக குறைந்துள்ளது.

சிலாங்கூர், பேராக் மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் திறக்கப்பட்ட ஐந்து பிபிஎஸ்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தஞ்சமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 288 பேர் எனத் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) முகநூலின் மூலம் அறிவித்தது.

படிப்படியாக மீண்டு வரும் சிலாங்கூரைத் தவிர, பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் 70 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் இரண்டு தற்காலிக வெளியேற்ற மையத்தில் உள்ளனர். மேலும் பெர்லிஸில் நான்கு பேர் ஒரு மையத்தில் தங்கியுள்ளனர்.

புக்கிட் சாங்காங் நிலையத்தின் நீர்மட்டம் இன்று காலை எச்சரிக்கை நிலையில் இருந்து இயல்பு நிலைக்குக் குறையத் தொடங்கியதாகச் சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் வெள்ளத் தகவல் தெரிவித்தது.

இதற்கிடையில், பிற்பகலில் சிலாங்கூர், பேராக், பெர்லிஸ், பகாங், பினாங்கு, மலாக்கா, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மெட்மலேசியா கணித்துள்ளது.


Pengarang :