NATIONAL

பொது டெண்டர் இல்லா  வெ.700 கோடி வெள்ளத் தடுப்பு திட்டத்தை மறுஆய்வு செய்ய பிரதமர் உத்தரவு

புத்ராஜெயா, டிச 6- மொத்தம் 1,500 கோடி வெள்ளி மதிப்புள்ள வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக டெண்டர் முறையில் அல்லாமல் நேரடி பேரத்தின் மூலம் வழங்கப்பட்ட 700  கோடி வெள்ளி மதிப்பிலான திட்ட அங்கீகாரத்தை மறுஆய்வு செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

 இத்திட்டத்திற்கான ஒப்புதல் தொடரப் படாது என்பதோடு வெளிப்படை போக்கு மற்றும் விதிமீறல் நிகழாதிருப்பதை உறுதி செய்வதற்காக அது மறு ஆய்வு செய்யப்படும் என அவர் சொன்னார்.

இது சிறியத் தொகை அல்ல. வெள்ளத் தடுப்பு திட்டத்தை விரைவுபடுத்துவது இதற்கான காரணமாக இருந்தாலும் விதிகள் மீறப்படும் போதும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் பிரச்சனைகள் எழுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

இது உண்மையில் வருத்தமளிக்கும் விஷயமாகும். இதற்கு உடன்படாமல் இருப்பதில் நிதியமைச்சின் உயர் அதிகாரிகள் ஒன்றுபட்டு இருப்பது குறித்து நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆயினும், அவர்கள் உத்தரவைப் பின்பற்ற வேண்டிய இடத்தில் உள்ளனர் என்றார் அவர்.

இன்று நிதியமைச்சில் நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கூட்டம் இம்மாதம் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள் குறித்து நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் தமக்கு விளக்கமளித்ததாக அவர் சொன்னார்.

அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் சில அவசர நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டியுள்ளது. இல்லாவிடில் வரும் ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாது என்றார் அவர்.


Pengarang :