ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பூலாவ் இண்டா கடல் பகுதியில் அனுமதியின்றி நங்கூரமிட்ட கப்பல் தடுத்து வைப்பு

ஷா ஆலம், டிச 7- கோலக் கிள்ளான், பூலாவ் இண்டா கடல் பகுதியில் அனுமதியின்றி நங்கூரமிட்ட கிரேன் கப்பல் ஒன்று தடுத்து வைக்கப்பட்டதாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் கூறியது.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் மத்திய பிராந்திய கடல் இலாகா மேற்கொண்ட ஓப் ஏசான் மற்றும் ஓப் பெந்தேங் லாவுட் ரோந்து நடவடிக்கையின் போது அந்த கப்பல் அனுமதியின்றி நங்கூரமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் கேப்டன் வி.சிவக்குமார் கூறினார்.

அக்கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அதன் மாலுமி கப்பலில் இல்லை. அங்கு 34 முதல் 49 வயது வரையிலான மூன்று மலேசியர்கள், இரு இந்தோனேசியர்கள் மற்றும் ஒரு பிலிப்பினோ பிரஜை ஆகியோர் மட்டுமே காணப்பட்டனர் என்று அவர் சொன்னார்.

அக்கப்பல் சிப்பந்திகள் யாவரும் அடையாளப் பத்திரங்களைக் காட்டத் தவறியதோடு நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட ஆவணங்களையும் அக்கப்பல் கொண்டிருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தங்கள் வருகையைத் தெரிவிக்கத் தவறியது மற்றும் அனுமதியின்றி நங்கூரமிட்டது தொடர்பில் 1952ஆம் ஆண்டு வர்த்தக க் கப்பல் சட்ட விதிகளை அக்கப்பல் மீறியுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :