ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஆலோசகர் சேவைக்கு 1.5 கோடி பெற்றேனா? மொகிடின் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்- அன்வார் மனு

கோலாலம்பூர், டிச 8- சிலாங்கூர் மாநில பொருளாதார ஆலோசகராக பணியாற்றியதற்கு தாம் 1 கோடியே 50 லட்சம் வெள்ளி கட்டணமாகப் பெற்றதாக தமக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதற்காக பெரிக்கத்தான் நேஷனல் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் நிபந்தனையின்றி மன்னிப்பு கோர வேண்டும் எனக் வலியுறுத்தி மனு ஒன்றை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ளார்.

ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் எஸ்.என்.நாயர் அண்ட் பார்ட்னர்ஸ் வழக்கறிஞர் நிறுவனத்தின் வாயிலாக இந்த மனுவை நேற்று அனுப்பினார்.

பாடாங் செராய் தொகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது பெரித்தாகினி  எனும் பெயர் கொண்ட டிக்டாக்  செயலி வாயிலாக அன்வார் பற்றி கூறிய குற்றச்சாட்டுகளை மொகிடின் மீட்டுக் கொள்ள வேண்டும் என்பதோடு தமக்கு கட்சிக்காரரின் மனதைப்  புண்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட கருத்துக்களையும் நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் எஸ்.என்.நாயர் கூறினார்.

அந்த காணொளியில் இடம் பெற்றுள்ள குற்றச்சாட்டுகளை மறுபடியும் எந்த இடத்திலும் முன்வைக்க மாட்டேன் என்று மொகிடின் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதியளிக்க வேண்டும் என்பதோடு இழப்பீடும் வழங்க வேண்டும் என அவர் சொன்னார்.

தங்களின் இந்த மனு  தொடர்பில் மொகிடின் தரப்பிடமிருந்து மூன்று தினங்களுக்குள் எந்தவொரு சாதகமான பதிலும் கிடைக்காவிடில் இடைக்காலத் தடையுத்தரவுக்கு விண்ணப்பிப்பது மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைளை மேற்கொள்ள தமது கட்சிக்காரர் உத்தவிட்டுள்ளதாக நாயர் குறிப்பிட்டார்.

இந்த காணொளியை 11 லட்சம் பேர் பார்த்துள்ளதோடு 6,061 பேர் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர். இதுதவிர இந்த காணொளி 2,169 முறை பகிரப்பட்டு 21,400 லைக்குகளையும் பெற்றுள்ளது.


Pengarang :