ECONOMY

பற்றாக்குறைப் பிரச்னையைக் களைய முட்டை, சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களுடன் அமைச்சர் சந்திப்பு

ஜோகூர் பாரு, டிச 10- வாழ்க்கைச் செலவின பிரச்னை தொடர்பான ஐந்து
செயலறிக்கைகள் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய
வாழ்க்கைச் செலவின நடவடிக்கை மன்றக் (என்.ஏ.சி.சி.ஒ.எல்.) கூட்டத்தில்
தாக்கல் செய்யப்படும்.

இந்த நடவடிக்கை மன்றத்தில் இடம் பெற்றுள்ள 15 அமைச்சுகளை
உள்ளடக்கிய இக்கூட்டத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
தலைமையேற்பார் என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச்
செலவினத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு விவகாரத்தில்
சம்பந்தப்பட்டுள்ள போக்குவரத்து அமைச்சு, விவசாய மற்றும் உணவு
உத்தரவாத அமைச்சு, உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவை
அறிக்கை சமர்ப்பிக்கும் என்று அவர் சொன்னார்.

இந்த கூட்டத்திற்குப் பிறகு அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து
தெரிவிப்போம். காரணம் இவ்விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த
தாகவும் மக்களின் வாழ்க்கைச் செலவினப் பிரச்னையைக் களைவதில்
பிரதமர் அதிகம் கவனம் செலுத்தி வரும் விஷயமாகவும் விளங்குகிறது
என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கை மன்றக் கூட்டத்திற்குப் பின்னர், முட்டை மற்றும்
மானிய விலை சமையல் எண்ணெய் பற்றாக்குறை தொடர்பில் உள்நாட்டு
வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சும் விவசாயம் மற்றும்
உணவு உத்தரவாத அமைச்சும் சந்திப்பு நடத்தவுள்ளதாகவும் சலாவுடின்
தெரிவித்தார்.


Pengarang :