ALAM SEKITAR & CUACA

கோலோக் ஆற்றில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியது- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பாசீர் மாஸ், டிச 10- அண்மைய சில தினங்களாக பெய்து வரும்
அடைமழை காரணமாக இங்குள்ள கோலோக் ஆற்றில் நீர் மட்டம்
அபாயக் கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து அந்த ஆற்றின் அருகே
வசிக்கும் பெக்கான் ரந்தாவ் பாஞ்சாங் மக்கள் விழிப்புடன் இருக்கும்படி
எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களைப் பார்த்து
பழக்கப்பட்டுவிட்ட போதிலும் நமது கணிப்பையும் மீறி வெள்ளம் ஏற்பட்டு
விடுமோ என்ற அச்சம் எப்போதும் இருந்து வருவதாக உணவகத்தை
நடத்தி வரும் சைட் அபு பாக்கார் சைட் டாவுட் (வயது 62) கூறினார்.

ஆண்டு தோறும் ஏற்பட்டும் வெள்ளத்தைக் கருத்தில் கொண்டு
அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் தடுப்புகளில் பொருள்களை பத்திரப்படுத்தி
வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என அவர் சொன்னார்.

வழக்கமாக ரந்தாவ் பாஞ்சாங்கில் வெள்ளம் ஏற்பட்டால் ஒரு வார
காலத்திற்கு நாங்கள் வியாபாரம் செய்ய முடியாது. காரணம், ஆற்று நீர்
பெருக்கெடுத்து பெரியவர்களுக்கு இடுப்பு வரை வெள்ளம் ஏற்பட்டு விடும்
என்றார் அவர்.

இன்று பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி கோலோக் ஆற்றில் நீர் மட்டம்
அபாயக் கட்டத்தையும் தாண்டி 9.34 மீட்டராக உள்ளதாக வடிகால் மற்றும்
நீர்பாசனத் துறையின் இன்போ பஞ்சிர் அகப்பக்கம் கூறியது.
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் இந்த நகரம்
வெள்ளத்தில் மூழ்கி விடும் என்று கடந்த இருபது ஆண்டுகளாக இங்கு
வியாபாரம் செய்து வரும் சைட் அபு பாக்கார் தெரிவித்தார்.


Pengarang :