NATIONAL

அமைச்சரவை நியமனம்- சிலாங்கூர் மந்திரி புசார் வரவேற்பு

ஷா ஆலம், டிச 10- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு
அறிவித்த துணை அமைச்சர்கள் பட்டியலை சிலாங்கூர் மாநில பக்கத்தான்
ஹராப்பான் தலைமைத்துவம் வரவேற்றுள்ளது.

சிலாங்கூர் மாநில ஹராப்பான் கூட்டணியிலிருந்து ஒரு முழு அமைச்சர்
மற்றும் இரு துணையமைச்சர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும்
திட்டமிடுவதில் டத்தோஸ்ரீ அன்வாருக்கு உள்ள திறமை மீது தாங்கள்
நம்பிக்கை கொண்டுள்ளதாக சிலாங்கூர் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

அரசாங்கத்தை அமைப்பதற்குரிய ஆற்றல் எந்தவொரு கட்சிக்கும் இல்லாத
காரணத்தால் பல்வேறு கட்சிகளின் இணைப்பினால் உருவாக்கப்பட்ட
ஒற்றுமை அரசாங்கம் இது என்பதை நாம் அனைவரும் கவனத்தில்
கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.

ஆகவே, அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் நியமனத்தில்
அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
என்று நேற்றிரவு இங்குள்ள ஐ-சிட்டியில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

துணையமைச்சர்கள் பட்டியலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
நேற்றிரவு வெளியிட்டார். சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் அய்மான்
அதிரா சாபு மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை
துணையைமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் 2ஆம் தேதி பிரதமர் வெளியிட்ட அமைச்சர்கள் பட்டியலில்
கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சாபு விவசாயம் மற்றும்
உணவு உத்தரவாதத் துறைக்கான அமைச்சராகவும் கெஅடிலான் கட்சியின்
துணைத் தலைவரும் பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான
ரபிஸி ரம்லி பொருளாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.


Pengarang :