ALAM SEKITAR & CUACANATIONAL

தாமான் செந்தோசா பெர்டானா பகுதியில் தீவிர வெள்ளத் தடுப்புப் பணிகள்- குணராஜ் தகவல்

கிள்ளான், டிச 21- நாடு வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் கடும் மழையின் காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்குக் கால்வாய்கள் மீது ஆய்வு மேற்கொள்ளும் பணியில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர் ஜாலான் சுங்கை ஜாத்தி, தாமான் செந்தோசா குடியிருப்பு பகுதியைக் கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் மற்றும் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவன பணியாளர்களுடன் நேற்று முன்தினம் பார்வையிட்டார்.

இந்த சோதனையின் போது அந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள வடிகால்கள் மற்றும் பிரதான கால்வாய்கள்  குப்பைகளால் அடைபட்டுக் கிடப்பது கண்டுபிடிக்கப் பட்டதாகக் குணராஜ் தெரிவித்தார்.

அங்குள்ள குடியிருப்பாளர்கள், வணிகர்களும் குப்பைகள், மரப்பொருள்கள், எண்ணெய் கழிவுகள் உள்ளிட்ட பொருட்களைக் கால்வாயில் வீசுவதால் நீரோட்டம் தடைப்பட்டு மழையின் போது கால்வாய்கள் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்படுகிறது என அவர் சொன்னார்.

இது தவிர,  தொழிற்சாலை மற்றும் கடை நடத்துனர்கள் பிரதானக் கால்வாயை சிமெண்ட் தடுப்புகளைக் கொண்டு நீரோட்டத்தைத் தடுத்துள்ளதையும் கண்டு பிடித்தோம். இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் கிள்ளான் நகராண்மைக் கழக குத்தகையாளர்களால் துப்புரவு பணியை சீராக மேற்கொள்ள தடையாக உள்ளது என்றார் அவர்.

இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக பல்வேறு அமலாக்கத் தரப்பினரை உட்படுத்திய சந்திப்புக் கூட்டத்திற்கு தாம் ஏற்படு செய்துள்ள அதே வேளையில் சம்பந்தப்பட்ட கால்வாய்களைத் துப்புரவு செய்யும் பணியையும் முடுக்கி விட்டுள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :