ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

நீரில் துர்நாற்றம்-நீர் சுத்திகரிப்பு மையங்களில் பணி நிறுத்தம்- 472 இடங்களில் நீர் விநியோகம் பாதிப்பு

ஷா ஆலம், டிச 24- சுங்கை செமினி மற்றும் புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு மையங்கள் இன்று காலை தற்காலிகமாக மூடப்பட்டதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெண்டேலா ஹிலிர் சுத்திகரிக்கப்படாத  நீர் அழுத்த நிலையத்தில் துர்நாற்றம் கண்டறியப் பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அது தெரிவித்தது.

நீர் சுத்திகரிப்பு மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதால் சிலாங்கூர் மாநிலத்தின் ஐந்து பிராந்தியங்களில் உள்ள 472 இடங்களில் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்படும் என அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நீர் விநியோகத் தடையினால் பெட்டாலிங் மாவட்டத்தில்  172 இடங்கள் பாதிக்கப்படும் எனக் கூறிய அந்நிறுவனம், உலு லங்காட் (54 இடங்கள்), சிப்பாங் (196 இடங்கள்), புத்ராஜெயா (23 இடங்கள்), கோல லங்காட் (27 இடங்கள்) ஆகியவை பாதிப்புக்குள்ளான இதர இடங்களாகும் எனத் தெரிவித்தது.

இந்த நீர் விநியோகத் தடை தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்கள் ஊடகங்கள் வாயிலாக பொது மக்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படும் என அது கூறியது.


Pengarang :