ECONOMYMEDIA STATEMENT

பிரேக் செயலிழந்த லோரி ஐந்து வாகனங்களை மோதியது- கோலாலம்பூர்-காராக் சாலையில் சம்பவம்

குவாந்தான், டிச 24- பிரேக் செயலிழந்த டிரெய்லர் லோரி ஐந்து வாகனங்களைத் மோதித் தள்ளியது. இச்சம்பவம் கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையின் 43வது கிலோ மீட்டரில் நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் நிகழ்ந்தது.

இரும்பு ஏற்றிச் சென்ற அந்த டிரெய்லர் லோரி பிரேக் செயலிழப்பு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து கொள்கலன் லோரி ஒன்றை மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் ஜைஹான் முகமது கஹார் கூறினார்.

இந்த மோதலால் கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் லோரி டோயோட்டா வியோஸ் காரை மோதிய வேளையில் டிரெய்லர் லோரி ஹோண்டா சிவிக் மற்றும் நாஸா சித்ரா கார்களுடன் மோதுண்டதாக அவர் சொன்னார்.

இந்த விபத்தின் காரணமாக அந்த டிரெய்லர் லோரியிலிருந்து இரும்புகள் சாலையில் விழுந்தன என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் கொள்கலன்  லோரி ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்ட வேளையில் மற்ற வாகனமோட்டிகள் காயமின்றி தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 43(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இவ் விபத்தை நேரில் கண்டவர்கள் போலீசாருக்கு தகவல் தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்.


Pengarang :